சிறப்பு எஸ்ஐ கொலைக்கான குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு: ஐஜி செந்தில்குமார் தகவல்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, தந்தை-மகன் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறை விசாரிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார்.

உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில், அதிமுக எம்எல்ஏ சி. மகேந்திரனின் தென்னந்தோப்பில் வேலை செய்து வந்த மூர்த்தி (60), அவரது குடும்பத்தினர் மற்றும் மனைவி காமாட்சி தங்கியிருந்தனர். கடந்த ஓராண்டாக மூத்த மகன் மணிகண்டன், மனைவி சபீனா ஆகியோரும் அங்கு பணியில் இருந்தனர்.

இந்நிலையில், மூர்த்தியின் இரண்டாவது மகன் தங்கபாண்டி (28) தந்தையை பார்வையிட வந்திருந்தார். கறி விருந்தோடு மது அருந்திய பின், தந்தை-மகன் இடையே வாக்குவாதம் உருவாகி, மூர்த்தி காயமடைந்தார். தகவல் பெற்ற பண்ணை மேலாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநர் அழகுராஜா சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீஸாரை பார்த்த தங்கபாண்டி, தோப்புக்குள் ஒளிந்திருந்தார். பின்னர், காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பியபோது, தங்கபாண்டி அரிவாளுடன் சண்முகவேலை தாக்கி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த குடிமங்கலம் போலீஸார் விரைந்து வந்து, சண்முகவேலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டுபிடித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை டிஐஜி சசிமோகன், மாவட்ட எஸ்.பி கிரிஷ் யாதவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். சண்முகவேலின் சடலம், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி செந்தில்குமார், “குற்றவாளிகள் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையிலுள்ளன. அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் நடைபெறும் விசாரணையின் மூலம் மேலும் பல தகவல்கள் தெரியவரும்” எனக் கூறினார்.

Facebook Comments Box