தவெக மதுரை மாநாடு: காவல் துறையின் கேள்விகளுக்கு புஸ்சி ஆனந்த் நேரில் விளக்கம்
மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநில மாநாடு தொடர்பாக காவல்துறையால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், திருமங்கலம் கூடுதல் எஸ்பியிடம் நேரில் விளக்கம் வழங்கினார்.
மதுரை அருகேயுள்ள பாரபத்தி என்ற பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறும் எனக் கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளித்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் 27-க்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி வருவதால் மாநாட்டை வேறு நாளில் நடத்த காவல்துறை பரிந்துரை செய்தது. இதையடுத்து, மாநாடு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில், மாநாடு குறித்த விவரங்களைத் தெரிவித்து, திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வழியாக எழுப்பப்பட்ட 50 கேள்விகளுக்கான விளக்கங்களை தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஏற்கனவே வழங்கியிருந்தார். கட்சியின் வாகனங்கள் செல்கின்ற வழிகள், மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள், சிசிடிவி கேமராக்கள் நிறுவும் இடங்கள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களுக்கும், புஸ்சி ஆனந்த் கூடுதல் எஸ்பி அன்சுல் நாகரிடம் விளக்கம் அளித்து, அறிக்கையும் ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்சி ஆனந்த், “மாநாடு தொடர்பாக காவல்துறையின் கேள்விகளுக்கு தேவையான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. திட்டமிட்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தவெக மாநில மாநாடு நடைபெறும்” எனத் தெரிவித்தார்.