தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்வழிகளை உருவாக்க ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
தென் மாவட்ட மக்களின் பயனுக்காக புதிய ரயில் பாதைகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி வலியுறுத்தியுள்ளார்.
அஸ்வினி வைஷ்ணவிடம் நேரில் சந்தித்து நவாஸ்கனி எம்.பி. வழங்கிய கடிதத்தின் விவரம்: தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் வாழும் மக்களுக்கு நன்மை தரும் வகையில், மானாமதுரை – அபிராமம் – பார்த்திபனூர் – கமுதி – சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என கோருகிறேன்.
இந்த புதிய பாதை வழியாக சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டால், தெற்குப் பகுதிக்கே முழுமையான பயனாக இருக்கும். வர்த்தக வளர்ச்சிக்கும் இது உதவக்கூடியதாக இருக்கும் என்பதால், இதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். மேலும், காரைக்கால் முதல் தூத்துக்குடி வரை உள்ள கிழக்குக் கடற்கரை வழித்தட ரயில் திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்தி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பகல் நேர விரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். தங்கச்சிமடம் ரயில்வே நிலையத்தை மீண்டும் செயல்பாட்டில் கொண்டு வந்து ரயில்கள் நிற்கும் வகையில் மாற்ற வேண்டும். ராமேஸ்வரம் – சென்னை இடையிலான ரயிலில் புதிய பெட்டிகள் மாற்றப்பட வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் உள்ளிட்ட நிலையங்களில் அதிவேக ரயில்கள் நிற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பன ஆகிய பல்வேறு கோரிக்கைகளை நவாஸ்கனி எம்.பி. முன்வைத்துள்ளார்.