ஓபிஎஸ் விலகியதால் பாஜக கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும்: டிடிவி தினகரன்
ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்ற அமமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட டிடிவி தினகரன், பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: “மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மற்ற கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை இழுத்து சேர்க்கும் பணியில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது.
பாஜக கூட்டணியை விட்டு ஓபிஎஸ் வெளியேறியதால், அந்த கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும். அவரை வெளியேறச் செய்தவர்களே, இப்போது அவரை மீண்டும் இணைக்க முயற்சி செய்ய வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேறாத வகையில் கையாள வேண்டும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்களை சேர்த்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகாமல் தடுப்பது முக்கியம்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அமித் ஷா யாரை அறிவிக்கிறாரோ, அமமுக ஏற்கும் நபராக அவர் இருந்தால், அந்த நபருக்கு ஆதரவு தரும் நிலைப்பாட்டில் இருப்போம். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஜெயலலிதாவின் தொண்டராக இருந்தவர். தற்போது கூட அவர் அதே உணர்வோடு இருக்கிறார். அதே நேரத்தில், அதிமுக தொண்டர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவை எந்த ஒருவருடனும் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் குடியேறி வசிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு, வாக்களிப்பதற்கும் சேர்த்துள்ளனர். அதுபோல், தமிழ்நாட்டிலும் வெளியிலிருந்து வந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டது என்றால், அதன் காரணம் புரியவில்லை” என்றார்.