45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை காவல் ஆணையர் அறிவுரை

சென்னையில் 45 வயதை தாண்டிய பெண் காவலர்களை இரவு நேர பணி ஆஜராக வேண்டிய அவசியமின்றி விடுவிக்கும் வகையில், சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை நகரத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு குற்ற செயல்களை தடுக்கும் முயற்சியாக காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இரவுப் பொழுதுகளில் முக்கியமான சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சட்ட ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு காவலர்களுடன் ஆயுதப்படை வீரர்களும் இணைந்து பணியாற்றுகின்றனர். இப்பிரிவுகளின் கீழ் பணியாற்றும் பெண் காவலர்களும் இரவு ரோந்து மற்றும் காவல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெண்கள் மீது ஏற்படும் பணிச்சுமையை குறைப்பதற்கும், அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பதற்கும், வேலை மற்றும் குடும்பத்தை சமநிலைப்படுத்துவதற்கும் இரவுப் பணி விலக்கி விட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் தலைமைக் காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவல் ஆய்வாளர்களுக்கு இரவு நேர பணி கடமைகளிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பால் பெண் காவலர்களும், அவர்களது குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Facebook Comments Box