அம்பத்தூரில் வீட்டு மின் கட்டணமாக ரூ.91,993: உரிமையாளருக்கு அதிர்ச்சி; மீட்டர் ஆய்வு செய்யப்படும் என மின்வாரியம் தகவல்

சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் ஒரு வீட்டு மின் கட்டணமாக ரூ.91,993 வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவல்லீஸ்வரர் நகரைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர், தனது வீட்டில் மாதத்தில் சராசரியாக 450 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி வருகிறார். இதற்காக 2 மாதத்துக்கு ஒருமுறை ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை மட்டுமே மின் கட்டணமாக செலுத்தி வந்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் வந்த ஜூலை மாத மின் கட்டண பதிவின்படி, அவரது வீட்டில் 8,370 யூனிட்கள் மின்சாரம் பயன்படுத்தியதாகக் காட்டப்பட்டு, ரூ.91,993 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்ததும் நந்தகுமாரும், அவரது குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

உடனடியாக அவர் அண்ணாநகர் மேற்கு மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தார். அதன்பேரில், இந்த விஷயத்தை மின்வாரிய அதிகாரிகள் கவனித்து, “மீட்டரின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும்; தவறாக பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது. அவசரமாக மீட்டரை ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால், உரிய திருத்தமும் நடவடிக்கையும் எடுக்கப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின்வசதி கட்டணத்தில் உயர்வு நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டு 3.16 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நந்தகுமாருக்கு விதிக்கப்பட்ட கட்டணம் அளவுக்கு மீறியது என்பதால் இது தொடர்பான சரியான விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Facebook Comments Box