கருணாநிதி நினைவு தினம்: புதுச்சேரி முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் மரியாதை செலுத்தினர்
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி அரசின் சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.
கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு நாள் இன்று புதுச்சேரி அரசால் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள மேரி ஹாலில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர் பாஸ்கரன், திமுகவின் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
திமுகவின் அமைதி பேரணி:
கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திமுக சார்பில், சட்டப்பேரவையிலும் மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில், சுதேசி மில் அருகிலிருந்து திமுகவினர் அமைதி பேரணியாக கிளம்பினர்.
பின்னர், அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல், புதுச்சேரியின் 23 சட்டமன்றத் தொகுதிகளிலும், அந்தந்த தொகுதி கழகங்களின் ஏற்பாட்டில், கருணாநிதியின் படம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.