புதுச்சேரியில் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20% உயர்வு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் நெசவுத் தொழிலாளர்கள் பெறும் கூலியில் அகவிலைப்படியை 20 சதவீதம் அதிகரித்து, ஆகஸ்ட் மாதத்திலிருந்து வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி கூட்டுறவுத் துறையின் கைத்தறி பிரிவு மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் இணைந்து ஏற்பாடு செய்த 11-வது தேசிய கைத்தறி தின விழா புதுச்சேரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

“கைத்தறி என்பது கடினமானதும் பாரம்பரியமும் மிக்க தொழில். முந்தைய காலங்களில் இது மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தது. நம் முன்னோர்களின் வாழ்வில் இந்த தொழிலின் தாக்கத்தை சிந்திக்க வேண்டும். இன்றைய இளையதலைமுறை ரெடிமேட் ஆடைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், கைத்தறி ஆடைகளை பயணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புதுச்சேரியில் ஒருகாலத்தில் கைத்தறி ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. விவசாயத்திற்கு அடுத்த நிலையை கைத்தறி தொழில் பெற்றது. ஆனால் தற்போது இது காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறது. தற்போது சுமார் 150 குடும்பங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவர்கள் இத்தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுவதில்லை, ஏனெனில் இது மிகவும் சிரமமானது.

இப்போது பல குடும்பங்களில் கல்வி வளர்ச்சி காரணமாக மருத்துவம், பொறியியல், செவிலியர் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பெரிய நிறுவனங்களில் வேலை பெறுகிறார்கள் அல்லது வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இதனால் வாழ்க்கை வசதிகள் உயரும்.

இதனுடன், கைத்தறி ஆடைகளை வாங்கும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. நம் மக்கள் இந்த ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் குடும்ப வருமானத்தை உயர்த்த வேண்டும். மாநில அரசு, கைத்தறி வளர்ச்சிக்காக தேவையான ஆதரவு வழங்கும்.

இந்த சூழலில், பிரதம நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் செயல்படும் நெசவுத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியில் கூடுதலாக 20 சதவீதம் உயர்த்தி, ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும்,” என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box