பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்: கீழடி குறித்து முக்கியக் கோரிக்கை!
மாநிலங்களவை உறுப்பினராக சமீபத்தில் பதவியேற்ற மநீம தலைவர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதைக்காக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன். அதில் மிக முக்கியமானதாக ‘கீழடி’ குறித்து தெரிவித்துள்ளேன்.
தமிழரின் பழமையான நாகரிகத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முயற்சிகளில், கீழடி பல ஆதாரங்களைக் கொடுத்துள்ளது. தமிழின் தொன்மை, நாகரிகத்தின் செம்மையை உலக அரங்கில் வெளிப்படுத்த இந்த முயற்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.”
மாநிலங்களவை உறுப்பினராக கடந்த ஜூலை 25ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலிலிருந்து திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.