“தேவை ஏற்பட்டால் என்கவுன்டர் தவிர்க்க முடியாதது” – அமைச்சர் ரகுபதி
“என்கவுன்டர் அவசியமான நிலை ஏற்பட்டால், அதைத் தவிர்ப்பது சாத்தியமல்ல” என தமிழ்நாடு இயற்கை வளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரும் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை. அத்தகைய ஒர் அங்கீகாரம் நாங்கள் எதிர்பார்ப்பதும் இல்லை. தமிழக மக்கள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதையே அவர்களே சொல்லி தருகின்றனர். அது போதும்.
எந்த இடத்தில் கொலைவெறி அல்லது கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றனவோ, அங்குப் பொறுப்புள்ளவர்கள் மீது அரசு உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. என்கவுன்டர் அவசியம் ஏற்பட்டால், அதைத் தவிர்க்க முடியாது. போலீசார் விசாரணைக்காக தனிப்பட்ட முறையில் செல்லும்போது சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இருப்பினும், இதைவிடக் கடுமையான சம்பவங்கள் வட இந்திய மாநிலங்களில் நடைபெறுகின்றன,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஸ் யாதவ் தகவல் வழங்கினார்.