எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் ஜனவரியில் முடிவடையும்: உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்ற நபர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்த மனுவில், “மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2018 ஜூன் மாதத்தில் அறிவித்தது. பின்னர், 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ.10 கோடி செலவில் 5.50 கிலோமீட்டர் நீளத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன் பின்பும், இத்தனை காலமாக கட்டுமானப்பணி ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, இந்த மருத்துவமனை கட்டுமானத்துக்கான பணிகள் விரைந்து நிறைவு பெறக்கூடிய வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கூறியதாவது:

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமானம் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. முதல்கட்ட கட்டுமானப்பணி 2026 ஜனவரி மாதத்தில் முடிவடையும். ஜனவரி 26-ஆம் தேதி அந்த மருத்துவ கட்டிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

மனுதாரர் தரப்பில், “குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “மத்திய அரசு தரப்பில் கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் கட்டி முடிக்க நீதிமன்றம் நேரடி உத்தரவு வழங்க இயலாது. எனவே, இந்த மனுவை முடித்து வைக்கின்றோம்” என்று தீர்ப்பு வழங்கினர்.

Facebook Comments Box