பள்ளிப்பட்டு விவசாயப் புலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம்: பொதுமக்கள், விவசாயிகள் அவலம்
மலை மற்றும் மலைச்சார்ந்த பகுதிகளை கொண்டுள்ள பள்ளிப்பட்டு வட்டத்தில் உள்ள வனப்பகுதிகளுடன், ஆந்திர மாநில வனப்பகுதிகளிலும் இருந்து இரை தேடி வரும் குரங்குகள் விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தாக்குதலை நடத்தி வருகின்றன என்று பொதுமக்களும், விவசாயிகளும் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: நெடியம், பண்டரவேடு, புண்ணியம் போன்ற பகுதிகளிலும், ஆந்திர வனப்பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான குரங்குகள் தினமும் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு பகுதிகளுக்கு ஆக்கிரமித்து வருகின்றன. இக்குரங்குகளால் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
முக்கியமாக, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகள் மற்றும் நெடியம், கொளத்தூர், கர்லம்பாக்கம், குமார ராஜுபேட்டை, பண்டரவேடு, புண்ணியம், வடகுப்பம், சூரராஜுபட்டடை போன்ற 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு இக்குரங்குகள் படையெடுத்து வருகின்றன.
இக்குரங்குகள் விவசாய நிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வளர்க்கப்படும் தென்னை மரங்களில் ஏறி இளநீர் மற்றும் தேங்காய்களை சிதைத்துப் பறித்து வீணாக்குகின்றன. கரும்பு தோட்டங்களை அழிக்கின்றன; மாந்தோப்புகளில் புகுந்து மாம்பழங்களை கடித்து வீணடிக்கின்றன. அதேபோல் காய்கறி தோட்டங்களிலும் நுழைந்து பயிர்களுக்கு சேதம் விளைவிக்கின்றன.
மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் நுழைந்து உணவுப் பொருட்களை கவர்ந்து உண்ணுவதோடு இல்லாமல், வீட்டு உபயோக பொருட்களையும் சேதப்படுத்துகின்றன. சாலைகளில் திரியும் இக்குரங்குகளால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நெடியத்தில் மலையில் அமைந்துள்ள செங்கல்வராய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களும், அங்கு சுற்றித் திரியும் குரங்குகளால் தொடர்ந்து அவதிக்குள்ளாகின்றனர். பல ஆண்டுகளாக தொடரும் இக்கட்டுக்கடங்கா நிலைமையைத் தடுக்கும் வகையில் வனத்துறையினரிடம் புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரை தீர்வு காணப்படவில்லை.
எனவே, இனிமேலாவது பள்ளிப்பட்டு வட்டத்தின் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் குரங்குகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசும், வனத்துறையும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.