விநாயகர் சதுர்த்தி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என இந்து முன்னணி வேண்டுகோள்

சென்னையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள இந்து முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியதாவது:

இந்து முன்னணி 1980ஆம் ஆண்டு ராம கோபால் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு சென்னை நகரில் ஒரு விநாயகர் சிலையை வைத்து, பொதுமக்கள் தரிசனத்துக்காக ஒரே இடத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை தொடங்கி வைத்தோம். இன்று, தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இந்து முன்னணி தலைமையில் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. “நம்ம சாமி, நம்ம கோயில், நாமே பாதுகாப்போம்” என்ற கோஷத்துடன் இந்து முன்னணி சார்பில் விழா நடைபெற உள்ளது. சென்னை நகரில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழா, ஆகஸ்ட் 31ஆம் தேதி விஸர்ஜன ஊர்வலத்துடன் நிறைவு பெறும்.

கடந்த வருடம் தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் அதைவிட அதிகமாக சிலைகள் வைக்கப்பட உள்ளன. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 5,501 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன; இந்த ஆண்டு கூடுதல் எண்ணிக்கையிலான சிலைகள் நிறுவப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழகம் முழுவதும் சிறிய சிலைகள் 15 லட்சம் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில் தடைகள் ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையிலும், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

ரம்ஜானுக்காக அரசு முஸ்லிம் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் போன்று, விநாயகர் சதுர்த்திக்காகவும் அனைவருக்கும் விநாயகர் சிலைகள் வழங்கப்பட வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின், ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற இஸ்லாமிய விழாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போல், ஆக.31-ம் தேதி சென்னையில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிலும் கலந்துகொள்ள வேண்டும்.

முதல்வர் நேரம் ஒதுக்கினால், அவரை நேரில் சந்தித்து அழைப்புக் கடிதம் வழங்க விரும்புகிறோம். மதுரை மாநாட்டுக்கு அழைப்பு அளிக்க அனுமதி கோரியபோதும், அவர் அனுமதி அளிக்கவில்லை. இந்த முறை அவர் ஒப்புதல் அளிப்பாரா என்பது இன்னும் உறுதி இல்லை எனவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் மணலி மனோகரும், மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவனும் உடன் இருந்தனர்.

Facebook Comments Box