செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உயர் நீதிமன்ற அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமாருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
இதய சம்பந்தமான சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா பயணிக்க அனுமதி கோரி அசோக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த விசாரணையின் போது, அசோக்குமாருக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் என்னென்ன நிபந்தனைகள் விதிக்கப்படலாம் என்பதை அமலாக்கத்துறையிடம் கேட்டு நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே, இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜராகிய அரசு வழக்கறிஞர், விதிக்க வேண்டிய நிபந்தனைகளைப் பட்டியலாக தாக்கல் செய்தார்.
அதன்பேரில், நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், அசோக்குமார் விசாரணை நீதிமன்றத்தில் ரூ.5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், அவரது மகளின் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன், அமெரிக்கா செல்ல அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.