சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பில் நாளை 15 இடங்களில் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகள் தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் நாளை (ஆகஸ்ட் 9) 15 இடங்களில் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்துகிறது.

இந்த தகவலை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: குடிநீர் வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று குறைகளைத் தீர்க்க கூட்டங்கள் நடக்கின்றன. ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டங்களில் பொதுமக்கள் தங்களது குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள், வரி மற்றும் கட்டணங்கள் குறித்த கேள்விகள், புதிய இணைப்புகள் குறித்த நிலுவை விவரங்கள் ஆகியவற்றை நேரில் மனுவாக அளிக்கலாம்.

ஒவ்வொரு பகுதியிலும் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் அதற்கான பராமரிப்பு தொடர்பான தகவல்களையும் இக்கூட்டங்களில் தெரிந்துகொள்ள பொதுமக்கள் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Facebook Comments Box