அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்

அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக் குழு” நேற்று தொடங்கப்பட்டது. இக்குழுவை உயர்கல்வி அமைச்சர் கோவி. செழியனும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இணைந்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி. செழியன் பேசியதாவது: இந்திய அளவில் உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கும் இலக்குடன் தொடங்கப்பட்ட “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பலனாக, அகில இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், பெண்களின் உயர்கல்வி சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

மாணவர்களுக்கும் பயன்படும் வகையில், ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தையும் முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். மாணவர்கள் கல்வி பயிலும் இடங்களில், பாலின பாகுபாடின்றி, பரஸ்பர புரிதலுடன் செயல்படச் செய்வதற்காக, “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழுக்கள்” உயர்கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது நந்தனம் கல்லூரியில் இக்குழுவின் செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில், தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் இக்குழுக்கள் உருவாக்கப்படும். இவற்றில் உளவியலாளர்கள், சமூகவியல் அறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், பெண்ணுரிமை நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் இணைந்து, மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் புரிதலை ஏற்படுத்துவார்கள். மேலும், பெற்றோர்–ஆசிரியர்–மாணவர் உறவை வலுப்படுத்தவும், சமத்துவமான சமுதாயத்தை உருவாக்கவும் இக்குழுக்கள் உதவும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உரையாற்றுகையில், “மாணவர்கள் பாலின விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அவசியம் பங்கேற்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, கல்லூரி முதல்வர் வே. புகழேந்தி, குழு தலைவர் மு. மஜிதாபர்வின், மருத்துவர் திருமகள் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box