விநாயகர் சிலைகள் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை
விநாயகர் சிலைகளை முழுவதும் இயற்கை பொருட்களைக் கொண்டு உருவாக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் நீண்ட காலமாக முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு பொதுமகனின் கடமை. கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் நமக்கான குடிநீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.
இந்த நீர்நிலைகளை பாதுகாக்க, விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் போது, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிடும் இடங்களிலேயே கரைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்றவை சேர்க்காத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத களிமண் போன்ற இயற்கை மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளின் ஆபரணங்களுக்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படலாம். பளபளப்புக்காக மரங்களின் இயற்கை பிசின் பயன்படுத்தலாம். நீர்நிலைகள் மாசுபடாதவாறு, சிலைகள் மற்றும் பந்தல்களின் அலங்காரங்களுக்கு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளுக்கு நச்சு கலந்த மற்றும் மக்காத ரசாயன வண்ணங்கள், எண்ணெய் வண்ணங்கள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை பயன்படுத்தக்கூடாது. அவற்றுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீர்சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு இல்லாத இயற்கை சாயங்களே பயன்படுத்தப்பட வேண்டும்.
அதேபோல், சிலைகளை அலங்கரிப்பதற்கும் இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகள், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி கரைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.