அன்புமணி தலைவராக தொடர்வது: பாமக பொதுக்குழு நிறைவேற்றிய 19 தீர்மானங்கள்
2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உட்கட்சித் தேர்தல் வரை, அன்புமணி ராமதாஸ் தலைவர் பதவியில் நீடிப்பது உள்ளிட்ட 19 முக்கிய தீர்மானங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு நிறைவேற்றியுள்ளது.
மாமல்லபுரம் கான்ஃப்ளுயன்ஸ் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் கூறுவது:
“தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், அனைத்து தரப்பு மக்களாலும் அதிகமாக வெறுக்கப்படும் ஆட்சி, தற்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலானது தான்.
திமுக ஆட்சியில் வீட்டு வரி முதலில் 175% வரை, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் 6% வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குடிநீர் வரிகள் அளவுக்கு மீறி உயர்த்தப்பட்டுள்ளன. மின்சாரக் கட்டணம் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.45,000 கோடி அளவில் அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 7,000 கொலைகள் நடந்துள்ளன. பெண்கள், குழந்தைகள், மாணவிகள், முதியவர்கள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகியுள்ளது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாதிக்கும் வகையில், எல்லா ஊர்களிலும் கஞ்சா விற்பனை பரவலாக நடைபெறுகிறது. விவசாயிகளின் நிலை மோசமடைந்துள்ளது. திமுக ஆட்சியில் வேளாண் துறை வளர்ச்சி -0.13% ஆகக் குறைந்திருப்பது, அரசு வேளாண்மைக்கு அக்கறை இல்லையென நிரூபிக்கிறது.
5.50 லட்சம் அரசுத் துறை வேலைகளும், 50 லட்சம் தனியார் வேலைகளும் வழங்குவதாக வாக்குறுதி அளித்தும், திமுக அரசு அதை நிறைவேற்றவில்லை. சில உயர்நிலைத் தலைவர்களைத் தவிர, திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற பாமக பொறுப்பு ஏற்று, 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும்” எனத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
பொதுக்குழு நிறைவேற்றிய 19 தீர்மானங்கள்:
- 2026 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உட்கட்சித் தேர்தல் வரை, அன்புமணி ராமதாஸ் (தலைவர்), ச. வடிவேல் இராவணன் (பொதுச் செயலாளர்), ம. திலகபாமா (பொருளாளர்) ஆகியோர் தொடர ஒப்புதல்.
- வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; இல்லையெனில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
- தமிழகத்தில் சாதி வாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; ஆகஸ்ட் 15 அன்று அறிவிக்க வேண்டும்.
- தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தனது கடமைகளை செய்யாததால் கண்டனம்.
- அன்புமணி மேற்கொண்டுள்ள “மக்கள் உரிமை மீட்புப் பயணம்” வெற்றியடைய பாமக உறுதி.
- பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு தோல்வியுற்ற திமுக அரசுக்கு கண்டனம்.
- போதைப் பொருட்கள் பரவலை முற்றிலும் தடுக்க வேண்டும்.
- முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது பாமக நோக்கம்.
- மின்சாரக் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.
- திமுக அரசு கூறும் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு தரவுகள் பொய்; வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
- அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் அமைப்பதை அரசு இயக்கமாக்க வேண்டும்.
- காவிரி–கோதாவரி இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
- ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,151 கோடி மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
- ஒரு லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட வேண்டும்.
- அரசு கல்லூரிகளில் முதல்வர் இடங்கள் நிரப்பப்பட வேண்டும்; 9,000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
- மக்களை ஏமாற்றும் திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
- காலி இடங்களை நிரப்பி, 6.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
- சிங்கள கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.