6 மாடிகள், 400 படுக்கைகள் – தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை திறப்பு
தாம்பரத்தில் ரூ.110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 9) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
குரோம்பேட்டை தாலுகா அரசு மருத்துவமனையை, செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தும் திட்டத்திற்கு 2021 ஆம் ஆண்டு அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. தாம்பரம் சானடோரியம் ஜிஎஸ்டி சாலையில், தேசிய சித்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை வளாகம் அருகே, சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு, 2023 ஆகஸ்டில் கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ஆறு மாடிகள் கொண்ட, 400 படுக்கைகள் வசதியுடன் கூடிய இந்த மருத்துவமனை கட்டுமானம் முடிவடைந்ததால், இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில், ரூ.115 கோடியில் கட்டப்பட்ட புதிய தலைமை மருத்துவமனை கட்டிடம், ரூ.7.24 கோடியில் அமைக்கப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புறநகர் பிரிவு, ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வக கட்டிடம் மற்றும் 3 நகர்ப்புற துணை சுகாதார நிலையங்களும் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எம்.பி. டி.ஆர். பாலு, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர். ராஜா, இ. கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா, அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை வசதிகள்:
- மொத்தம் 6 தளங்கள்
- 4 அறுவை சிகிச்சை அரங்குகள்
- 3 அவசர அறுவை சிகிச்சை அரங்குகள்
- 111 தீவிர சிகிச்சை படுக்கைகள்
- 289 பொதுப் பிரிவு படுக்கைகள்
தள வாரியாக வசதிகள்:
- தரைத்தளம்: அவசர சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே, சிடி, எம்ஆர்ஐ, மருந்தகம், புறநோயாளி பிரிவு
- 1ஆம் தளம்: அவசர அறுவை சிகிச்சை அரங்கம், நம்பிக்கை மையம், குடும்ப நலப் பிரிவு, கர்ப்பிணி புறநோயாளி பிரிவு
- 2ஆம் தளம்: மகப்பேறு அறுவை சிகிச்சை பிரிவு, பிரசவ அறைகள், உயர் தீவிர சிகிச்சை பிரிவு
- 3ஆம் தளம்: புதிதாக பிறந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை, நீரிழிவு பிரிவு, ரத்த வங்கி, பிரசவ பிந்தைய பராமரிப்பு
- 4ஆம் தளம்: ஆண்-பெண் அறுவை சிகிச்சை வார்டுகள், தீக்காய பிரிவு ஆய்வகம்
- 5ஆம் தளம்: அவசர அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை, உயர் சார்பு பிரிவு, பொது சிகிச்சை பிரிவு
- 6ஆம் தளம்: குழந்தைகள் பொது பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்கள் பொது பிரிவு
புதிய மருத்துவமனை திறக்கப்பட்டதால் தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சிகிச்சை வசதி மேம்படும். குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க முடியும் என்பதால், உயிரிழப்புகள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது.