சென்னை | மது அருந்திய தகராறு – இளைஞர் கொலை; பிஹார் நபருக்கு ஆயுள் சிறை
முன்பகையும், மதுபானம் அருந்திய தகராறும் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை 18-ஆவது உதவி அமர்வு நீதிமன்றம் பிறப்பித்தது.
பிஹாரைச் சேர்ந்த முகமது கலாம் மற்றும் அவரது சகோதரர் முகமது இஜாஜ், சென்னை ராயப்பேட்டையில் தங்கி அங்குள்ள சிக்கன் கடையில் வேலை செய்து வந்தனர். அதே இடத்தில் பிஹாரைச் சேர்ந்த அலி உசேன் (குட்டி) என்பவரும் பணியாற்றினார். இஜாஜ் மற்றும் அலி உசேன் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2023 மே 23-ம் தேதி, அலி உசேன் வாங்கி வைத்திருந்த மதுபானத்தை இஜாஜ் அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட சண்டையில், அலி உசேன், இஜாஜை தாக்கி கொலை செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கலாம் அளித்த புகாரின் பேரில், அண்ணாசாலை காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. தலைமறைவாக இருந்த அலி உசேன், பின்னர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணையில், குற்றச்சாட்டுகள் உறுதியாக நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி என். எஸ். ஸ்ரீவத்சன், அலி உசேனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.6,500 அபராதமும் விதித்தார்.