எம்ஜிஆர், ஜெயலலிதா – சாதி வரம்புகளை மீறிய தலைவர்கள்: திருமாவளவன் பாராட்டு
“எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சாதி எல்லைகளைத் தாண்டியவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“தமிழக அரசியல் கடந்த ஆறு தசாப்தங்களாக எவ்வாறு செயல்பட்டது, அதன் அமைப்பு எப்படி உருவானது என்பதைக் கூறும் உரையில், எம்ஜிஆரைப் பற்றி குறிப்பிட்டேன். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரையும் நான் பெரிதும் மதிக்கிறேன்; பலமுறை திறம்பட பாராட்டியுள்ளேன்.
கலைஞர் நினைவேந்தல் நிகழ்வில், தமிழ்நாடு அரசியல் கலைஞர் மையப்படுத்தி எவ்வாறு எதிர்ப்பு அரசியலாக மாறியது என்பதைச் சொன்னேன். எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. அவரை ஒரு சாதிக்குள் மட்டும் வரையறுக்கவில்லை; தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக, கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியது. ஜெயலலிதா தன்னை ‘பார்ப்பனப் பெண்’ என சட்டமன்றத்திலேயே கூறினார். பார்ப்பனர்கள், கலைஞருக்கு காட்டிய எதிர்ப்பை அதிமுக, எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை என்பதே என் கருத்து.
மிகப்பெரிய கூட்டணி அமைப்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளனவா என தெரியாது. இருந்தாலும், அது கூட்டணியை பாதிக்கும் அளவுக்கு தள்ளுமா என்பதை அறிய முடியாது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி என்ன பொருளில் கூறினார் என்பதற்கு அவரிடம் விளக்கம் பெற வேண்டும்,” என்றார்.