ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது – தங்கச்சிமடத்தில் சாலை மறியல், போக்குவரத்து நின்றது
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கச்சிமடத்தில் மதுரை–தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள், குழந்தைகளுடன் அமர்ந்து சாலை மறியல் நடத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இன்று காலை, ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அந்தபோது, தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டல்லஸ் என்பவரின் விசைப்படகு, இலங்கை மன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் எல்லை மீறி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி படகையும் அதிலிருந்த டல்லஸ் (56), சிலைடன் (26), அருள் ராபர்ட் (53), லொய்லன் (45), ஆரோக்கிய சான்ரின் (20), பாஸ்கர் (45), ஜேசு ராஜா (32) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்டவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து, அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வவுனியா சிறையில் அடைக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெறும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களை படகுடன் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இன்று மாலை நூறுக்கும் மேற்பட்டோர் தங்கச்சிமடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நாளை ஞாயிறு விடுமுறை என்பதால் ராமேசுவரத்துக்குச் செல்லும் பிரதான சாலையில் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.