சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் குற்றவாளியை என்கவுண்டர் செய்தது மாபெரும் தவறு – கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு
சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சிறப்பு சார்பு ஆய்வாளர் (Special Sub-Inspector) கொலை வழக்கில் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வழங்காமல், என்கவுண்டர் செய்தது பெரிய தவறு என கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
காரைக்குடியில் ஊடகங்களிடம் பேசிய அவர், அடிக்கடி பொதுத்தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுவது தான் சரியான நடைமுறை என்றும் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையம் அரசுக்கு அப்பாற்பட்ட சுயாதீன அமைப்பாக இருந்தாலும், தற்போது அது நடுநிலையாக செயல்படுகிறதா என்பது சந்தேகமாகி விட்டதாகவும், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி முன்வைத்த வாக்காளர் பட்டியல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது, இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்தான நிலையை உருவாக்குவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, பாஜகவினர் முன்னின்று பதில் கூறுவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், தாம் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், ஆனால் வாக்காளர் பட்டியலில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா, இந்தியாவுக்கு விதித்த கூடுதல் வரி தொடர்பாக அவர், இது அமெரிக்க மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்; பேச்சுவார்த்தை மூலம் விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன் என்றும், பாஜகவுக்கு வெளிநாட்டு தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, நாட்டிற்கு சாதகமான முடிவுகளைப் பெறும் திறன் இல்லை என்றும் விமர்சித்தார்.
சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கைச் சுட்டிக்காட்டிய அவர், “குற்றவாளியை கைது செய்து, நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்க வேண்டிய இடத்தில் என்கவுண்டர் செய்ததால், உண்மைகள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. இது சட்ட ஆட்சிக்கே கேள்விக்குறி எழுப்பும் செயல்” என்றார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஏற்கெனவே மூன்று தேர்தல்களில் தோல்வியடைந்தது போலவே, 2026 தேர்தலிலும் அதே நிலை அமையும் என அவர் கணித்தார். தமிழகத்தின் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை வரவேற்ற அவர், அந்த வளர்ச்சி மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.