பள்ளி மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு’ திட்டம் – அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

மாணவிகள் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் குற்றச்செயல்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், தமிழக அரசு அறிமுகப்படுத்திய புதிய ‘அகல் விளக்கு’ திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ். ரகுபதி, சிவ. வி. மெய்யநாதன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: “இன்றைய காலத்தில் செல்போன் அனைவரையும் ஆக்கிரமித்து, அடிமைப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய நேரம் இது. தனியார் அறை மட்டுமல்லாது, பல இடங்கள் கண்காணிக்கப்படுகின்றன. இனிமையாக பேசுவோரால் எளிதில் மயங்கிவிடக்கூடாது. சமூக வலைதளங்களில் சிக்கினாலும் அஞ்சத் தேவையில்லை, அதிலிருந்து மீள வழிகள் உள்ளன. கவனச் சிதறலை தவிர்க்க, புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும்.

பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்; அதேபோல் ஆசிரியர்களும் மாணவிகளை கண்காணித்து, தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும்” என்றார்.

ஆட்சியர் எம். அருணா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநர் மா. ஆர்த்தி, இணை இயக்குநர் வை. குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Facebook Comments Box