பழங்குடி மக்களின் மொழி, பண்பாட்டை பாதுகாக்க ரூ.2 கோடி திட்டம் – அமைச்சர் மா. மதிவேந்தன்
பழங்குடியினரின் மொழி மற்றும் பண்பாட்டைப் பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், 2 நாள் நிகழ்ச்சியாக நடைபெறும் உலக பழங்குடியினர் தின விழாவை, நேற்று (ஆக. 9) அமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை கூடுதல் செயலாளர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் வரவேற்புரையாற்றினார். பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், மாநில பழங்குடியினர் நல வாரியத் தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘தொல்குடி’ இணையதளத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், “இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அடையச் செய்வது. அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு மதிப்புக் கூட்டி, சந்தைப்படுத்த உதவி வழங்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பழங்குடியின மக்களின் மொழி, பண்பாட்டை இணையதளத்தின் மூலம் பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளைப் பாதுகாப்பது, இயற்கைச் சூழலையும், அதனால் பூமித் தாயையும் பாதுகாக்க உதவும்” என்றார்.
இதனையொட்டி நடைபெற்ற கண்காட்சியில், பழங்குடி மக்களின் புகைப்படங்களும், அவர்கள் தயாரித்த பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்றன.