தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை மழை பெய்யும் வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சிகளின் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 15-ஆம் தேதி வரை சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

தெற்கு கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதேபோல் தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இதன் விளைவாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பொழியும் வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 26°C முதல் 36°C வரை இருக்கும்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ஆம் தேதி வரை மணிக்கு 40-50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலில் சில இடங்களில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மழை பதிவுகள்:

நேற்று காலை 8.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமயிலூரில் 10 செ.மீ., வேப்பூர், நெய்வேலி, மாத்தூரில் தலா 9 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் 8 செ.மீ., மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணை, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, கடலூர் மாவட்டம் குப்பநத்தம் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை:

பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 38.5°C, கரூர் பரமத்தியில் குறைந்தபட்சமாக 21.5°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Facebook Comments Box