தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் விரைவில் தகுதி பெற்ற அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் ரூ.5.96 கோடி மதிப்பிலான குளிர் சாதன வசதி உடைய திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.பி ராணி, எம்.எல்.ஏ தங்கபாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திருமண மண்டபம் கட்டுவதற்கான நிதி: சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.3.46 கோடி, பொது நிதியில் ரூ.1.50 கோடி என மொத்தம் ரூ.5.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சார் பதிவாளர் அலுவலகம் அருகே 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மணிடல் நாட்டு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அமைச்சர் கூறியதாவது: “சமுதாய கூட்டங்களில் உணவு உண்ணும் இடம், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லை. ஆனால் இத்தகைய திருமண மண்டபத்தில் அனைத்தும் இருக்கும். எம்எல்ஏ பேசுவதை வைத்தே தேர்தல் வந்துவிட்டது என்பதை நன்கறிந்தோம். உரிமையுடன் உங்கள் ஆதரவை பெற இதற்காக பணிகள் நடக்கின்றன.

கடந்த முறை 1.60 கோடி விண்ணப்பங்களில் 1.15 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டது. தற்போது “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் விண்ணப்பங்கள் பெற்று, உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. விரைவில் தகுதி உள்ள அனைவருக்கும் தொகை வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்” என்று அமைச்சர் கூறினார்.

முன்னதாக, ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் ரூ.70 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மதுரை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box