முடிச்சூரில் மழைநீர் தேக்கம் தவிர்க்க வடிகால் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து பருவமழை தொடங்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் முன்கூட்டிய நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் தி. சினேகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக 33 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

மாவட்டத்தில் 390 இடங்கள் பாதிப்பு வாய்ப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முடிச்சூரும் ஒன்று. 2015 முதல், ஒவ்வொரு மழைக்காலத்திலும் இப்பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. பல தடவைகள் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆய்வு செய்தாலும், நிரந்தர தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. ஊரக வளர்ச்சி துறை சார்பில் அரசுக்கு நிதி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதும், இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாததால் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மழை காலங்களில் பாதிப்பைத் தவிர்க்க, நிரந்தர மழைநீர் கால்வாய் அமைப்பதே ஒரே தீர்வாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

முடிச்சூர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் பி. தாமோதரன் கூறியதாவது:

“வடகிழக்கு பருவமழை பெய்யும்போது, முடிச்சூர் பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, தெருக்களில் நீர் புகுந்து மக்களைப் பாதிக்கிறது. இது, போதிய வடிகால் வசதி இல்லாததால்தான். 2015 முதல் எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தாலும், தீர்வு கிடைக்கவில்லை.

நாங்கள் பல மனுக்கள் அளித்துள்ளோம். குறிப்பாக 11-வது வார்டில், நேதாஜி நகர் 2-வது பிரதான சாலை, மேற்கு லட்சுமி நகர், ஏ.எல்.எஸ். கீரின் லேன்ட் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் வடிகால் அமைத்து, நீரை அடையாறு ஆற்றில் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

அழுத்தத்தின் பேரில், ரூ.6 கோடி மதிப்பீட்டுத் திட்டம் தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நிதி ஒதுக்கப்படாததால், ஆண்டுதோறும் இந்த பிரச்சனை தொடர்கிறது. உடனடியாக நிரந்தர தீர்வு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Facebook Comments Box