அனைவருக்கும் கல்வி உரிமை வழங்கும் திமுக அரசின் நடவடிக்கைகளே முனைவர் வசந்தி தேவிக்கு உண்மையான அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின்
அனைவருக்கும் கல்வி உரிமையை உறுதி செய்யும் திமுக அரசின் செயல்பாடுகள்தான், முனைவர் வசந்தி தேவிக்கு செலுத்தப்படும் மிகச் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான அஞ்சலியாகும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மறைந்த வே. வசந்தி தேவியின் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் காணொலி மூலம் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில், “கல்வி என்பது வியாபாரப் பொருளாகவோ அல்லது அதிகாரக் கோட்டையில் பாதுகாக்கப்படும் ஆயுதமாகவோ இருக்கக்கூடாது; அது எளிய மக்களுக்கும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். கல்விதான் அவர்களுக்கு உண்மையான ஆயுதம், அழிக்க முடியாத செல்வம் என்ற எண்ணத்துடன், வசந்தி தேவி வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.
மாநில மகளிர் ஆணையத் தலைவராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் சிறப்பானவை. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அறிமுகமான சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு வலுவான ஆதரவாளராக இருந்தார். நம் திமுக அரசின் பள்ளிக்கல்வி முன்னெடுப்புகளையும் மனமார பாராட்டியவர். அனைவருக்கும் கல்வி உரிமையை நிலைநாட்டும் நமது அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு செலுத்தப்படும் ஆக்கப்பூர்வமான அஞ்சலி என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ. எஸ். குமரி, வழக்கறிஞர் ஹென்றி திபேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.