10வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பெ.சண்முகம், சீமான் நேரில் ஆதரவு

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் 10வது நாளாக நேற்று போராட்டத்தில் நீடித்தனர்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் பகுதிகளில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து, பணியை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதோடு, முன்பு என்யூஎல்எம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணியை தொடர வேண்டும் என கோரியும், பணியாளர்கள் பகல்-இரவு அங்கிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில், மேயர் ஆர். பிரியா, ஆணையர் ஜெ. குமரகுருபரன் முன்னிலையில் 7வது கட்ட பேச்சுவார்த்தை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் உழைப்போர் உரிமை இயக்க பிரதிநிதிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

பின்னர், உழைப்போர் உரிமை இயக்க செயலாளர் சுரேஷ், “இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகள் குறித்து ஒரு சொல்லும் பேசப்படவில்லை. எங்களை பணி நீக்கம் செய்வது பற்றிதான் விவாதிக்கப்பட்டது. திமுக கவுன்சிலர்கள், பணம் காட்டி போராட்டத்தை கலைக்க முயல்கின்றனர்” என்றார்.

உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி, “கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும். போராட்டக்காரர்கள் பணிக்கு திரும்பியதாக பரவும் தகவல் பொய்” என தெரிவித்தார்.

இதற்கிடையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம், போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். “நாடு முழுவதும் தனியார்மயமாக்கம் நடைபெறுகிறது; தமிழகமும் விதிவிலக்கு அல்ல. ஏற்கெனவே உள்ள உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது. நியாயமான முறையில் தீர்வு காண நாங்கள் முயற்சிக்கிறோம்” என்றார்.

அதன்பின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போராட்டத்துக்கு நேரில் சென்று, “நகரத்தை சுத்தம் செய்வதை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. மாநகராட்சி இருக்கும்போது ஏன் இப்படி செய்கிறார்கள்? தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய பணமில்லை என்பவர்கள், மதுரையில் ரூ.200 கோடியில் நூலகம் கட்டுகிறார்கள். தேவையற்ற செலவுகளை செய்து, மக்களை ஏமாற்றுவது தவறு. 2021ல் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

பாமக பொருளாளர் திலகபாமா நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். ‘தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு சமூகநீதியின் அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தினார். ‘பேச்சுவார்த்தை என்ற பெயரில் மிரட்டி, அவர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முயல்வது கண்டிக்கத்தக்கது’ என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Facebook Comments Box