ஓய்வூதிய திட்டங்கள் ஆய்வுக்குழு; அரசு ஊழியர் சங்கங்களுடன் 4 நாள் கருத்துகேட்பு

தமிழக அரசின் ஓய்வூதிய திட்டங்களை ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம் 4 நாள்கள் கருத்துக்களை கேட்க உள்ளது.

2003 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 2004 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதற்குமுன் நிலவிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என மாநில அரசுப் பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து, பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்றையும் விரிவாக ஆய்வு செய்ய ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம், நிதித்துறை துணை செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இந்த குழுவிற்கு 9 மாதங்களில் விரிவான அறிக்கையையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், பிப்ரவரியில் அமைக்கப்பட்ட குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இப்போது, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாட குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 25, செப்டம்பர் 1, செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சங்க பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இதற்காக, 2 பிரதிநிதிகளின் விவரங்களை வழங்குமாறு சங்கத் தலைவர், செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Facebook Comments Box