தேர்தலில் 8.22% வாக்கு பெற்றதே எங்களது முன்னேற்றம்: சீமான் விளக்கம்
வெற்றி, தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும், தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்றிருப்பதே தனது முன்னேற்றம் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை தன்னாட்சி அமைப்புகள் என நம்புகிறோம். ஆனால் அவை அதிகாரத்தில் இருப்பவர்களின் கருவிகளாகவே செயல்பட்டு வருகின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான் தனியாக நின்று 8.22% வாக்குகளை பெற்றேன். இது எனது வளர்ச்சி அல்லவா? இந்திய அளவில் நான் ஆட்டத்திலேயே இல்லை, ஆனால் என்னை தேடி வாக்கு அளித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றியுள்ளனர்.
1.1% வாக்கு சதவீதத்திலிருந்து 8.22% ஆக உயர்ந்திருப்பது என் முன்னேற்றம். இவ்வாறு வளர்ந்த கட்சி தமிழகத்தில் இல்லை. தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால் எனது வாக்குகள் குறையும் என்கிறார்கள். ஏன் தெரியுமா? அப்படியானால் நான் கட்சியை கலைத்து வேறு கட்சியில் சேர்ந்து விடுவேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் செத்தாலும் தனியாகவே செல்வேன்.
தனித்து நின்றாலும் தனித்துவத்துடன் நிற்பேன். என் தனித்துவத்தை இழக்க மாட்டேன். என் வெற்றியையும் தோல்வியையும் மக்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்” என அவர் கூறினார்.