நோயாளி விவரங்கள், ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
தேசிய மருத்துவ ஆணைய (NMC) செயலர் டாக்டர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளின் அனைத்து விவரங்களும், அவர்களுக்கு செய்யப்படும் பரிசோதனைகளின் தகவல்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முன்பே உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும், சில மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதை பின்பற்றாமல் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்க்கப்படும் நோயாளிகளின் ஆவணங்களில் துறைசார் மருத்துவரும், முதுநிலை உறைவிட மருத்துவரும் கையொப்பமிடுவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆய்வுகளின் போது, இந்த விவரங்களையும் NMC அதிகாரிகள் பரிசோதிப்பார்கள். போலி ஆவணங்கள் அல்லது தவறான தகவல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும், மருத்துவர்களுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.