சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நம் நாட்டின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் மகிழ்ச்சி, எழுச்சி நிறைந்த சிறப்பான நிகழ்ச்சியாக இந்த விழாவை நடத்த வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ணமயமாக்க வண்ணக்காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து, தேசியக் கொடியை ஏற்றி விழா நடத்த வேண்டும்.
மேலும், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர்-ஆசிரியர் கழக உறுப்பினர்கள், புரவலர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் ஆகியோரையும் அழைத்து விழாவில் பங்கேற்கச் செய்ய வேண்டும்.
பிளாஸ்டிக் வகை தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்றும், தேசியக் கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த நிலையில் ஏற்ற கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.