பழநி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டும் விவகாரம் – தற்போதைய நிலை நீடிக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்

பழநி முருகன் கோயில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபம் கட்டும் திட்டத்தில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை எழுமலைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் நிதியில் இருந்து ரூ.4.54 கோடி செலவில் உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது அறநிலையத் துறை விதிகளுக்கு முரணானது; கோயில் நிதி திருமண மண்டபத்திற்காக பயன்படுத்தப்படக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் மற்றும் நரசிங்க பெருமாள் கோயில்களுக்காக ரூ.400 கோடி நிதி இருப்பதால், இவை வறுமை நிலையில் உள்ள கோயில்கள் அல்ல. கோயில் சார்பு இல்லாமல் மண்டபம், கல்லூரி, மருத்துவமனை, கடைகள் கட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள் முருகன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், “பழநி கோயில் நிதியில் உத்தமபாளையத்தில் திருமண மண்டபம் கட்டும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இதுகுறித்து பழநி கோயில் செயல் அலுவலர் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஆகஸ்ட் 19-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Facebook Comments Box