சுதந்திர தின தொடர் விடுமுறைக்கு 2,449 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்து துறை அறிவிப்பு
சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, மொத்தம் 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர். மோகன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 13, 14, 15 தேதிகளில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு 1,320 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 14, 15 தேதிகளில் 190 பேருந்துகள், மாதவரத்திலிருந்து 24 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஆகஸ்ட் 17 அன்று ஊர் திரும்பும் பயணிகளுக்காக 715 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதனால் மொத்த சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை 2,449 ஆகிறது.
சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதிக்கான பயணத்திற்கு, 67,000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.