சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – 9,100 போலீஸார் பணியில்

வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னை முழுவதும் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் ஆணையாளர் அருணின் உத்தரவின் பேரில், மொத்தம் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தமிழக முதல்வர் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு கோட்டையும் அதன் சுற்றுப்புறங்களும் 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தால் சூழப்பட்டுள்ளது.

கூடுதல் ஆணையாளர்கள் என். கண்ணன் (தெற்கு), ஜி. கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ் குமார் (வடக்கு) ஆகியோர் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள் முதல் காவலர்கள் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ, வணிக வளாகங்கள், கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் காவல், தீவிர சோதனை, ரோந்து பணிகள், வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Facebook Comments Box