கட்சிக் கொடிக்கம்ப வழக்கில் திருப்பம் – மேல்முறையீட்டு மனுக்கள் முடித்துவைப்பு, தடை நீக்கம்

பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் எந்த உத்தரவுமின்றி முடித்துவைத்தது. இதனால், பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான தடையுத்தரவு நீங்கியுள்ளது.

மதுரையில் இரண்டு இடங்களில் அதிமுக கொடிக்கம்பங்களை அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொது இடங்களில் அமைத்திருந்த கொடிக்கம்பங்களை அகற்றவும், புதியதாக அமைக்க வேண்டுமெனில் அரசின் அனுமதி பெற்று பட்டா இடங்களில் அமைக்கவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை 2 நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியது.

இதையடுத்து, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மாநிலம் முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்றும் பணிகளை தொடங்கின. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்தார். அதை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, “அனைத்து கொடிக்கம்பங்களையும் ஒரே இடத்தில் நிறுவலாம்; அதுவரை நிலைமை மாற்றமின்றி தொடர வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டது.

பின்னர் திமுக, அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தவெக உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில், கொடிக்கம்ப உத்தரவை எதிர்த்து கதிரவன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அங்கு, அரசு தரப்பில் “19 மாவட்டங்களில் 100% கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன; 10 மாவட்டங்களில் 90% மற்றும் சென்னையில் 31% அகற்றப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம், “அரசுக்குச் சொந்தமான பொது இடங்களை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த முடியாது” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதனால், நேற்று மதுரை உயர்நீதிமன்றம், “உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்துவிட்டது; எனவே, மேல்முறையீட்டு மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்க முடியாது. தேவையெனில் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்” எனக் கூறி, மனுக்களை முடித்துவைத்தது. இதன் மூலம், தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சிக் கொடிக்கம்பங்களையும் அகற்றும் பணிக்கு தடையில்லை.

Facebook Comments Box