“தூய்மைப் பணியாளர்கள் என்ன தேசவிரோதிகளா?” – அரசை கடுமையாக விமர்சித்த விஜய்

அராஜக முறையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்கு மாற்று இடம் ஒதுக்கப்பட வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தினார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக போராடிய 600-க்கும் மேற்பட்டவர்களை, காவல்துறையினர் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்து விஜய் வெளியிட்ட அறிக்கையில்,

“தங்களின் உரிமைகளுக்காக அமைதியாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, அராஜகமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிச திமுக அரசை கடுமையாக கண்டிக்கிறோம். கைது செய்யும் போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்து, சிலர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

இவ்வளவு துயரமான நிலையை மனசாட்சி கொண்ட எவரும் பொறுத்துக்கொள்ள முடியாது. காயம் அடைந்தோருக்கு உடனடியாக தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட வேண்டும்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு, எந்த உதவிகளும் கிடைக்காத சூழலில் வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துடன் கூட பேச முடியாத அளவிற்கு அடைத்துவைப்பது — தூய்மைப் பணியாளர்கள் என்ன தேசவிரோதிகளா? ஆளும் அரசுக்கு சிறிதளவு மனசாட்சியும் இல்லையா?

இந்தச் செயல், தமிழ்நாட்டில் மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

எதிர்க்கட்சியில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லியே அவர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் நிறைவேற்றவில்லை? நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஏன் கொடுத்தீர்கள்?

அராஜக முறையில் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்கு மாற்று இடம் ஒதுக்கப்பட வேண்டும்.”

Facebook Comments Box