சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா – தலைமை நீதிபதி தேசியக் கொடியேற்றினார்
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி எம். எம். ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் அணிவகுப்பு மரியாதையை பெற்றார்.
சமநீதிகண்ட சோழன் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தமிழக அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கி தலைமை நீதிபதி பாராட்டினார். தொடர்ந்து, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதற்கு முன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில், தலைவர் அமல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் பார் கவுன்சில் நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.