சுதந்திர தினத்தை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடினர்: டெல்லியில் பிரதமர், சென்னையில் முதல்வர் தேசியக் கொடி ஏற்றினர்
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
டெல்லி செங்கோட்டையில் 21 துப்பாக்கி முழக்கத்துடன், பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். அதே நேரத்தில், எம்.ஐ-16 ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் பொழியப்பட்டன. ஹெலிகாப்டர்களில் “ஆபரேஷன் சிந்தூர்” வாசகத்துடன் கூடிய கொடிகள் பறந்தன.
பின்னர் சுதந்திர தின உரையில், பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி குறைப்பு, வேலைவாய்ப்பு திட்டங்கள், புதிய பாதுகாப்பு திட்டங்கள் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்டார். காலையில், மகாத்மா காந்தி நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.
முப்படைத்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
“வீடுதோறும் கொடி ஏற்றுவோம்” (ஹர் கர் திரங்கா) என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று, நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி கொண்டாடினர்.
பிரதமரின் நீண்ட உரை:
1947-ல் முதல் முறையாக சுதந்திர தின உரை நிகழ்த்திய ஜவஹர்லால் நேரு 72 நிமிடங்கள் பேசினார். பின்னர், 2015-ல் பிரதமர் மோடி 88 நிமிடங்களும், 2024-ல் 98 நிமிடங்களும் பேசினார். இந்த ஆண்டு, 103 நிமிடங்கள் உரையாற்றி மோடி புதிய சாதனை படைத்தார்.
சென்னையில் கோலாகலம்:
சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் 119 அடி உயர கம்பத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் உரையாற்றிய அவர், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், தியாகிகளின் குடும்ப ஓய்வூதிய உயர்வு, மலைப்பகுதி மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச விடியல் பயண திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பு குழந்தைகளுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், வெளிநாட்டு தூதர்கள், முப்படை அதிகாரிகள், தலைமைச் செயலர், துறைச் செயலர்கள், டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2021-ல் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின், கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவது இது 5-வது முறை.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 11,000-க்கும் மேற்பட்ட படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3,000 போலீஸார் போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர். ட்ரோன் தாக்குதலை தடுக்க சிறப்பு ஏவுகணைகள், வெடிகுண்டு கண்டறியும் ஸ்கேனர்கள், முக அடையாள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 14-ம் தேதி இரவு முதல் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
சென்னையிலும் 5 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டது. முதல்வர் பயணிக்கும் பாதை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.