அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லம், உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை
திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி வீடு, அவரது மகனும் பழநி எம்எல்ஏவுமான இ.பெ. செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று (சனிக்கிழமை) காலை 7.15 மணியளவில் திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வீட்டுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது அமைச்சர் ஐ. பெரியசாமி தனது இல்லத்தில் இருந்தார். இதே நேரத்தில் திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சரின் மகனும் பழநி தொகுதி எம்எல்ஏவுமான இ.பெ. செந்தில்குமார் இல்லத்திலும், அசோக்நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திரா இல்லத்திலும் மூன்று வாகனங்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வீடுகளில் சிஆர்பிஎப் போலீஸார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை நடப்பதை அறிந்த திமுகவினர், கோவிந்தாபுரம் பகுதியில் திரண்டனர். திண்டுக்கல்லில் அமைச்சருக்கு தொடர்புடைய மூன்று இடங்களிலும் காலை 7.15 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை திமுக ஆட்சியில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்தபோது விதிமுறைகளை மீறி, உளவுத்துறை போலீஸ் அதிகாரி ஜாபர்சேட் மனைவிக்கு வீட்டுவசதி வாரிய இடம் ஒதுக்கப்பட்ட வழக்கில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.