நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு: ஜி.கே. வாசன், என்.ஆர். தனபாலன் இரங்கல்

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

அவரது அறிக்கையில், “இல. கணேசன் பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். சிறுவயதிலேயே ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தில் இணைந்து பணியாற்றியவர். தொடர்ந்து மக்கள் பணியிலும், இயக்கப் பணியிலும் சிறப்பாக செயல்பட்டு, கட்சியின் தேசிய செயலாளராகவும், தமிழக மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் உயர்ந்தார். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு பெற்று சிறப்பாக பணியாற்றினார்.

பிரதமர் மோடியின் அன்பை பெற்றவர். நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு அயராது பணியாற்றி, தற்பொழுது நாகாலாந்து மாநில ஆளுநராக சிறப்பாக செயல்பட்டு தமிழகத்திற்கு புகழ் சேர்த்தார்.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் அன்போடு பழகும் தன்மையுடையவர். இவரது மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும். குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடிப்பதும், மற்றவர்களிடம் கண்ணியமாக பேசுவதிலும் வல்லவர். யாரிடமும் சினந்து பேசமாட்டார். அன்புடன் உபசரித்து வரவேற்பதால் மாற்று கட்சியினரையும் நண்பர்களாக்கி கொண்டவர்.

சிறு வயதிலிருந்து இறுதி வரை கட்சிக் கொள்கையில் உறுதியாக செயல்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினர், மிசோரம், மேற்கு வங்காளம், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் ஆளுநராகவும் பதவி வகித்தார். அனைவரிடமும் நண்பர்களாகவும் எளிமையாகவும் பழகிய நல்ல அரசியல் தலைவரை தமிழ்நாடு இழந்து வாடுகிறது.

அவரை இழந்து வாடும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments Box