“அமலாக்கத் துறை சோதனை… திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது!” – கனிமொழி எம்.பி

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்ட நிலையில், “எந்த அச்சுறுத்தலாலும் திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது” என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும். எந்த அச்சுறுத்தலாலும் திமுகவினரை ஒன்றும் செய்ய முடியாது.

பாஜக அரசு ஒருபுறம், தேர்தல் கமிஷனை தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு எஸ்ஐஆர் போன்ற பல தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் மீது ஏவுகிறது. அதனடிப்படையில்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எத்தனையோ சிக்கல்களை கடந்து கட்சியோடு உறுதுணையாக நிற்கக் கூடியவர். எந்த பயமுறுத்தலாலும் கட்சித் தொண்டர்களை அச்சுறுத்த முடியாது” என்று அவர் கூறினார்.

இதனிடையே, “‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

வைகோ காட்டம்: “மத்திய பாஜக அரசு அரசியல் நோக்குடன், தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்த வருமான வரி, அமலாக்கத் துறையை பயன்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தான் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

10 மணி நேரத்துக்கு மேலாக சோதனை:

திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, அவரது மகன், மகள், குடும்பத்தினருக்குச் சொந்தமான இருளப்பா மில் ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டுக்கு காலை 7.15 மணியளவில் 3 கார்களில் ஆறுக்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அமைச்சர் வீட்டில் இருந்தபோது, அதிகாரிகள் தங்கள் சோதனையை தொடங்கினர். உடன் வந்திருந்த சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி ஏந்தி வீட்டின் முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்கள் யாரும் வெளியில் வர அனுமதிக்கவில்லை.

அதே நேரத்தில், திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழநி தொகுதி எம்எல்ஏ.வுமான இ.பெ.செந்தில்குமார் வீடு மற்றும் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராணியின் வீடு ஆகிய இடங்களில் தலா 3 கார்களில் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அந்த இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல், திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் ஒட்டுப்பட்டி என்ற இடத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் குடும்பத்தினருக்கு சொந்தமான இருளப்பா மில்லிலும் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 4 இடங்களில் சோதனை நடைபெற்றது.

கடந்த 2006-2011 வரை திமுக ஆட்சியில் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, முன்னாள் டிஜிபி ஜாபர்சேட் மனைவிக்கு முறைகேடாக வீட்டு வசதித் துறை சார்பில் இடம் ஒதுக்கப்பட்டதாகக் கூறி, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இதில் சட்டவிரோத பணப் பறிமாற்றம் நடந்துள்ளது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box