அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம்
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகளின் வீடுகள், அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் வீடு திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் துரைராஜ் நகரில் உள்ளது. அவரது வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை 7.15 மணி அளவில் வந்தனர். அப்போது, அமைச்சர் பெரியசாமி, வீட்டில் இருந்தார். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீஸார், வீட்டின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள், வீட்டுக்குள் நுழைந்து தீவிர சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் சீலப்பாடியில் அமைச்சர் பெரியசாமியின் மகனும், பழநி தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் வீடு மற்றும் திண்டுக்கல் வள்ளலார் நகரில் அமைச்சரின் மகள் இந்திராணியின் வீடு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்து, அமைச்சர் மற்றும் அவரது மகன், மகள் வீடுகள் முன்பு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
அமைச்சரின் வீடு அருகே தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது, ஆத்தூர் தொகுதி மேலக்கோட்டையை சேர்ந்த திமுக தொண்டர் சரவணன் திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். கட்சியினர் தடுத்து அவரை காப்பாற்றினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதால், கூடுதலாக சிஆர்பிஎஃப் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் உள்ள ஒட்டுப்பட்டியில் அமைச்சர் பெரியசாமி குடும்பத்தினருக்கு சொந்தமான இருளப்பா ஜவுளி மில்லிலும் சோதனை நடைபெற்றது.
பூட்டை உடைத்து சோதனை: சென்னை அடையாறு பசுமைவழிச் சாலையில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் வீட்டில் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பூட்டியிருந்த அறையை திறக்குமாறு வீட்டு பணியாளர்களிடம் கூறினர். சாவி இல்லை என்று கூறியதால், அதிகாரிகள் வீட்டு பணியாளர்கள் முன்னிலையில் அந்த அறையின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர். சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதியில், அமைச்சரின் மகனான ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அனைத்து இடங்களிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை 11 மணி நேரம் கடந்த நிலையில், மாலை 6.30 மணிக்கு முடிந்தது. திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் சோதனையை முடித்துக்கொண்டு, அதிகாரிகள் வெளியேறியதும், அமைச்சர் பெரியசாமி வெளியே வந்து, கூடியிருந்த நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னணி: 2006-2011 திமுக ஆட்சியில் வீட்டுவசதி துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது, முன்னாள் காவல் அதிகாரி ஜாபர்சேட் மனைவிக்கு வீட்டு வசதி துறை சார்பில் முறைகேடாக இடம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா என்று அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் சேகரிக்க இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ஈ.டி.க்கும் அஞ்சமாட்டோம், மோடிக்கும் அஞ்சமாட்டோம், சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.