ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? – அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் உள்ளதாக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வழங்கியுள்ளது.
அனுராக் தாக்கூர் கூறியதாவது: கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்காளர்கள் சந்தேகத்துக்குரியவர்களாக இருக்கிறார்கள். அதில் 9,133 பேர் போலி முகவரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 84-ஆம் வாக்குச்சாவடியில் உள்ள ஒரே வீட்டில் 30 வாக்காளர்கள் பதிவாகியுள்ளார்கள். மேலும், ரஃபியுல்லா என்ற ஒரே பெயரில் மூன்று வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதுதொடர்பான அவரது பேச்சு வீடியோவையும் தமிழக பாஜக சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் உண்மையில் ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் உள்ளனரா என தமிழக தகவல் சரிபார்ப்பகம் விசாரணை நடத்தியது. அதில், அது தனி வீடு அல்ல, அடுக்குமாடி குடியிருப்பு எனத் தெரியவந்தது.
இது குறித்து தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது: கொளத்தூர் தொகுதி ஆண்டாள் அவென்யூ 11-ஆம் எண் என்பது தனி வீடல்ல. அது ஏ.எஸ். வீனஸ் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பு. வாக்குச்சாவடி எண் 84-ன் பதிவுகளின்படி, வரிசை எண் 40 முதல் 75 வரையிலான வாக்காளர்கள் அனைவரும் அதே அடுக்குமாடியில் வசித்து வருகின்றனர்.
அதில் ரஃபி என்ற பெயர் வரிசை எண் 50-ல், 52-ல் கணவர் எனவும், மேலும் 348 மற்றும் 352-ல் தந்தை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காணொலியில் கூறியபடி, ரஃபி என்ற பெயரில் 3 வாக்காளர்கள் இல்லை.
மேலும், வாக்குச்சாவடி எண் 157-ல் ரஃபியுல்லா பெயர் தந்தை மற்றும் கணவர் என இரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 11 எண் கொண்ட குடியிருப்பில் இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்கிறார்கள் என தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் அங்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். என தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.