விவசாயிகள் விண்ணப்பித்தவுடன் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனடியாக பயிர் கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் தொடக்க விழா, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழி பயிர் கடன் வழங்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை அவர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ. வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி எம்.பி. மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், தடங்கம் ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.
அதற்கு முன், தருமபுரி அருகே ஒட்டப்பட்டி அவ்வை வழி பகுதியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அவர் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து, கலைஞரின் தோளில் வளர்ந்து, நெடுமாறன் எனப் பெயர்மாற்றம் பெற்றது, ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உயர்ந்தது எனவும், இதழியல், திரைப்படம், அரசியல் போன்ற பல துறைகளில் தனித்துவத்தைப் பதித்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.