சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான நெறிமுறைகள் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொன்று தொட்டு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய கடமையாகும். நம் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் கடல், ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.

அந்த வகையில், வரும் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் கரைப்பது தொடர்பாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வகுத்த வழிகாட்டுதல்கள் www.tnpcb.gov.in இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வழிகாட்டுதல்களின் படி, சென்னை மாவட்டத்தில் சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடித் துறைமுகம், திருவொற்றியூரில் உள்ள பாப்புலர் எடைமேடை பின்புறம், அங்கு உள்ள யுனிவர்சல் கார்போரேண்டம் தொழிற்சாலை பின்புறம், பல்கலை நகர் நீலாங்கரை, ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் ஆகிய இடங்களில் மட்டும் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள்:

  1. களிமண் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்றவற்றை கலந்து செய்யாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் உருவாக்கப்பட்ட சிலைகள் மட்டுமே கரைக்கப்பட வேண்டும்.
  2. சிலைகளின் ஆபரணங்களுக்கு உலர்ந்த மலர்கள், வைக்கோல் போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்படலாம். பளபளப்புக்கு மர பிசின் போன்ற இயற்கை பிசின்கள் உகந்தவை.
  3. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பந்தல்கள் மற்றும் சிலைகளின் அலங்காரத்திற்கு சுற்றுச்சூழல் நட்பு பொருட்கள் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
  4. நச்சுத்தன்மை கொண்ட எண்ணெய் வண்ணங்கள், செயற்கை சாயங்கள், எனாமல் பூச்சுகள் போன்றவற்றை சிலைகளில் பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக நீர்த் தளத்தில் கரையக்கூடிய, மக்கக்கூடிய இயற்கை சாயங்களே பயன்படுத்தப்பட வேண்டும்.
  5. அலங்கார ஆடைகள் மற்றும் வண்ணப் பூச்சுகள் இயற்கை பொருட்களாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  6. விநாயகர் சிலைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய விதிமுறைகளின் படி, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களிலேயே கரைக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலதிக தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரிடம் தொடர்புகொள்ளலாம்” என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Facebook Comments Box