‘கோரைப்பாய் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம்’ – இபிஎஸ் புதிய தேர்தல் வாக்குறுதி
கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் போல், அதிமுக அரசு அமைந்ததும் கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் குறிப்பிட்ட அளவு யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பயணத்தில் கீழ்பென்னாத்தூரில் பேசிய அவர்,
“நாம் எல்லோரும் விவசாயிகள். அதிமுக 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை வழங்கி பொற்கால ஆட்சியை தந்தது. மழை, வெள்ளம் எதுவுமே பிரச்சினையாக இருக்கவில்லை.
ஆனால் திமுகவின் 51 மாத ஆட்சி மக்கள் விரோதமாகவே உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் செல்வதற்கு முன் மக்களிடம் ஆலோசனை நடத்துகிறேன். மக்கள் இப்போதே இந்த ஆட்சியை அகற்றி, அதிமுக ஆட்சியை கொண்டு வர தீர்மானித்துவிட்டார்கள். திமுக கூட்டணிக் கட்சிகளை நம்புகிறது, ஆனால் அதிமுக மக்களை நம்புகிறது. மக்கள் தான் நீதிபதிகள்.
இந்த 51 மாதங்களில் அமலாக்கத்துறை வீடுவீடாக கதவைத் தட்டுகிறது. இன்று கூட ஒரு அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. இது ஊழல் நடந்திருப்பதாகத்தானே அர்த்தம். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எத்தனை பெயர் வைத்தாலும், எத்தனை குழுக்களை அமைத்தாலும், இந்த தேர்தல் உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்டும். ஏற்கனவே 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் நிலை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. எல்லாமே நாடகம்.
ஒரு கட்சிக்கு மக்கள் விருப்பப்பட்டு சேர வேண்டும். மிரட்டிச் சேர்த்தால் நிலைக்காது. கட்சியில் சேரவில்லை என்றால் உரிமைத் தொகையை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள்.
மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும். அப்போது முக்கால்வாசி எம்.எல்.ஏ.க்கள் எங்கு இருக்க வேண்டுமோ அங்கே இருப்பார்கள். அவர்கள் செய்த ஊழல் மிக அதிகம்.
அதிமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி, மும்முனை மின்சாரம், வறட்சி நிவாரணம், பயிர்க்காப்பீட்டு திட்டம் மூலம் இழப்பீடு, குடிமராமத்து திட்டம் என ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டன. இன்று விவசாயிகள் குடிமராமத்துத் திட்டம் கேட்கிறார்கள். ஆனால் இன்றைய ஆட்சியில் ஒரு லோடு மண்ணை அள்ள கூட கப்பம் கட்டணும்.
இந்த பகுதி நெல், கரும்பு, வேர்க்கடலை விளையும் பகுதி. அதற்கான நல்ல விலை அதிமுக ஆட்சியில் உறுதிப்படுத்தப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவராக 7.5% உள் இடஒதுக்கீடு கொடுத்து 2818 பேர் இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். ஏழை மக்களுக்காக 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு அதை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் 4000 மினி கிளினிக் தொடங்கப்படும்.
தாலிக்குத் தங்கம் திருமண உதவித் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். அது மீண்டும் தொடரும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்த திட்டத்தையும் நிறுத்திவிட்டனர். எங்கள் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்.
கோரைப்பாய் நெசவு செய்பவர்கள், ஏற்கனவே கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்குவது போல, தங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதிமுக அரசு அமைந்ததும், கோரைப்பாய் நெசவாளர்களுக்கும் குறிப்பிட்ட அளவு யூனிட் இலவசமாக வழங்கப்படும்” என்றார்.