பணி நிரந்தரம் கோரிக்கை : தருமபுரி வந்த முதல்வரிடம் மனு அளித்த பகுதி நேர ஆசிரியர்கள்

பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி, தருமபுரி வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக சமர்ப்பித்தனர்.

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இன்று தருமபுரி வந்த முதல்வர், வேளாண் பெருங்குடி மக்களுக்கு இணைய வழி மூலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரே நாளில் கடன் பெறும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதோடு, தருமபுரி மாவட்டத்தில் 362 கோடி 77 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய 1,073 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், 512 கோடி 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி துவக்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடி 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

அதியமான் கோட்டையில் துவங்கப்பட்டுள்ள உழவர் நலன் காக்கும் முன்னோடி திட்டம் விரைவில் முழு தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போதே, தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோ. ரமேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் மு. தருமலிங்கம் தலைமையில், நீண்ட காலமாக தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும், பல்வேறு கோரிக்கைகளையும் கொண்ட மனுவை முதல்வரிடம் அளித்தனர்.

இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் கூறியதாவது:

“பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 12,500 ரூபாய் மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் மே மாதத்தில் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை. இன்றைய விலைவாசி உயர்வில் இந்த குறைந்த சம்பளத்தில் குடும்பத்தை நடத்துவது கடினம். எனவே 15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த தொகுப்பூதிய முறையை நிறுத்தி, இனி காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். தற்காலிக வேலையை ஒழித்து, திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்.

Facebook Comments Box